விராட் கோலி பார்மில் இல்லையா? ‘சிங்கம் எப்பவும் சிங்கம் தான்’ பயிற்சியாளர் அதிரடி!
விராட் கோலி இந்தியாவுக்காக செய்த சாதனைகளை எடுத்து பார்த்தால் அவர் யார் என்று தெரியும் என அவருடைய சிறிய வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.
அதில் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் விராட் கோலி பழையபடி பார்முக்கு திரும்புவார் என்பது தான். ஏனென்றால், அவருடைய சமீபத்திய பார்ம் ஆரம்ப காலத்தை போல இல்லை என்கிற விமர்சனங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. கடைசியாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-வது போட்டியில் அரை சதம் விளாசினால் கூட இன்னும் அவர் பழைய பார்முக்கு வரவில்லை என விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இருப்பினும், அவர் மீது நம்பிக்கை வைத்து முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் விராட் கோலியின் சிறிய வயது பயிற்சியாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது விராட் கோலி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த அந்த பேட்டியில் பேசியதாவது ” விராட் கோலி ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அவர் சிறப்பான வீரர் இல்லை என்று சொல்லக்கூடாது.
ஒரு சில போட்டிகள் அப்படி ஆகலாம்..அதற்காக அவர் பார்மில் இல்லை என விமர்சிப்பது மிகவும் தவறான ஒரு விஷயம். அவர் இதுவரை இந்திய அணிக்காக எந்த அளவுக்கு சாதனை படைத்தது இருக்கிறார் என்பதை நாம் எடுத்து பார்த்தாலே அவர் யார் என்று தெரியும். எனவே, அப்படிப்பட்ட ஒருவரை இப்படி பேசுவது என்னை பொறுத்தவரை சரியான விஷயம் இல்லை.
இப்போது நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் மீண்டும் பழையபடி விளையாடுவார் என நான் உறுதியாக நம்புகிறேன்” எனவும் விராட்கோலியின் சிறிய வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை வைத்து தெரிவித்துள்ளார்.