விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
விராட் கோலிக்கு மூட்டு வலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அறிமுகம் ஆகியுள்ளார்.
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. முதல் ஒருநாள் போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பந்துவீசி வருகிறது. இன்று விளையாடப்போகும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஆஸ்திரேலிய அணி நேற்றே வெளியிட்டு விட்டது. ஆனால் இந்திய அணி டாஸ் போடும் வரை யார் அந்த 11 பேர் கொண்ட அணி என கூறாமலே இருந்தது.
இதனால அணியில் புதிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஷாக் தரக்கூடிய அளவிலேயே பிளேயிங் 11 அணி இருந்தது. பார்டர் கவாஸ்கர் தொடரில் ஃபார்ம் குறித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி இந்த தற்போது ஒருநாள் தொடரில் களமிறங்கி மீண்டு(ம்) வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி ரசிகர்களுக்கு அவர் இந்த போட்டியில் இல்லை என்ற அதிர்ச்சி செய்தி தான் காத்திருந்தது.
மூட்டுவலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும், ஹர்ஷித் ராணாவும் இந்த போட்டியில் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் என ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். இதனால் அடுத்து ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் விராட் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.