தோல்விக்கு காரணம் இதுதான்: செம கடுப்பில் விராட் கோலி
- கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை எனில் 100 ரன்களை கூட நாம் கொடுத்து விடுவோம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது.
துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு ஆடிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தாவின் பந்துகளை சரமாரியாக விளாசி தள்ளினர். விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும் டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின் 31 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பந்தை வீணாக்காமல் தங்கள் பங்கிற்கு ரன்களை விளாசிவிட்டு சென்றனர். ராபின் உத்தப்பா 25 பந்துகளில் 33 ரன்களும் நிதிஷ் ரானா 23 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இறுதியாக கடைசியில் 17 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆன்ட்ரு ரஸல் களத்தில் வந்து இறங்கினார். அவர் வந்து இறங்கியவுடன் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தார். அவர் வெறும் 13 பந்துகளை பிடித்து 48 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர்களும் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர்களில் 5 பந்துகள் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
இந்த தோல்வி குறித்து பேசிய விராட் கோலி கூறியதாவது…
கடைசி 4 ஓவர்களில் நாங்கள் பந்துவீசியதை கண்டிப்பாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இன்னும் நாங்கள் அறிவு கூர்மையாக யோசிக்க வேண்டும். அவரைப் போன்ற அதிரடி வீரர்கள் பந்து வீச இன்னும் யோசிக்க வேண்டும். இன்னும் 25 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம். கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை எனில் 100 ரன்களை கூட நாம் கொடுத்து விடுவோம். தோல்விக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் தான் என்று கோபமாகவும் சோகமாகவும் பேசினார் விராட் கோலி.