VijayHazareTrophy2022: விஜய் ஹசாரே கோப்பையை வென்ற சவுராஷ்டிரா! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!
விஜய் ஹசாரே 2022 தொடரின் இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணி விக்கெட் வித்யாசத்தில் மஹராஷ்டிரா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
விஜய் ஹசாரே 2022 கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையிலான மஹாராஷ்டிரா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் அகமதாபாத், நரேந்திரமோடி மைதானத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் எடுத்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் சிரங் ஜானி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஹார்விக் தேசாய் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் சதமடிக்க அணி 46.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அதிகபட்சமாக சவுராஷ்டிரா அணியின் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்தார். மஹராஷ்டிரா சார்பில், முகேஷ் சவுத்ரி மற்றும் விக்கி ஆஸ்டவால் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 5 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி, வெற்றி பெற்று விஜய் ஹசாரே 2022 கோப்பையை வென்றது.