டி20 கிரிக்கெட் தொடரில் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி!
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த வருண் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடர் நாயகன் விருதை வருண் சக்கரவர்த்தியும் பெற்றனர்.
இதில், வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனை படைத்துள்ளார். நடந்து முடிந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது பெயரை சொல்லியும் சொல்லாமலும் பொறித்துள்ளார்.
இவர் இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஏனென்றால், இந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், ஒட்டுமொத்தமாக ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனை தான்.
இந்த சாதனை பட்டியலில் 2022ல் இங்கிலாந்துக்கு எதிராக 15 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர்முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2021ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், அவரை வருண் சக்ரவர்த்தி பின்னுக்கு தள்ளியுள்ளார்.