லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்… ரெய்னாவின் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஆனது கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தற்போது 15 லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது.
அதன்படி, கடைசியாக நடந்த மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோன் பிஞ்ச் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் அர்பன்ரைசர்ஸ் அணியில் டுவைன் ஸ்மித், மார்ட்டின் குப்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். டுவைன் ஸ்மித், ரசாக் வீசிய பந்தை அடிக்க லக்மலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மார்ட்டின் குப்டில் நிதானமாக விளையாடி தொடக்கத்தை வலுப்படுத்தினார்.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!
இதன்பிறகு குர்கீரத் சிங் வந்த வேகத்தில் வெளியேற, சில நிமிடங்களில் மார்ட்டின் குப்டிலும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்கள்.
இறுதியில் நகர் களமிறங்கி 40 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.2 ஓவர்களில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் எடுத்தது. ஹமீத் அட்டகாசமான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும், ரசாக் மற்றும் லக்மல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெஸ்ஸி ரைடர், உபுல் தரங்கா பெரிதும் சோபிக்காமல் தலா 5 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்பிறகு டில்ஷான் முனவீர விளையாடி 34 ரன்கள் எடுத்தார். ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, மன்விந்தர் பிஸ்லா இருவரும் தலா 18 ரன்கள் எடுத்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஓரளவு மட்டுமே ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
முடிவில், 19.2 ஓவரில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பவன் சுயால் 3 விக்கெட்டுகளையும், பீட்டர் ட்ரெகோ மற்றும் கிறிஸ் எம்போஃபு தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். மேலும், இன்று நடைபெறும் 4 வது போட்டியில் பில்வாரா கிங்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.