“வராலற்று வெற்றி”! வங்கதேச கேப்டன் ஹசன் சாந்தோ பெருமிதம்!
சென்னை : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகப் பாகிஸ்தான் அணியை, வங்கதேச அணி வீழ்த்தியதை தொடர்ந்து கேப்டன் ஹசன் ஷாந்தோ பேட்டி அளித்துள்ளார்.
முதல் டெஸ்ட் ஹைலைட்ஸ் ..!
வங்கதேச அணி பாகிஸ்தானில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் இருந்த வேளையில் டிக்ளர் செய்தனர்.
அதில், சவுத் ஷகீல் 141 ரன்களும், ரிஸ்வான் 171 ரன்களும் எடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக நெருக்கடியான விளையாட்டை விளையாடினார்கள். இதில், முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடி அணிக்குப் பக்கபலமாக இருந்தார். அவரைத் தொடர்ந்து மெஹிதி ஹசன் 77 ரன்கள், லிட்டன் தாஸ் 56 ரன்கள் எடுத்து உறுதுணையான விளையாட்டை அளித்தனர்.
இதனால், முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை வங்கதேச அணி சேர்த்து 117 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி வங்கதேச அணியின் அபார பந்து வீச்சால் வெறும் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனால் வெறும் 29 ரன்களே முன்னிலை பெற்றிருந்ததால், வங்கதேச அணிக்கு 30 ரன்கள் இலக்காக அமைந்தது. இந்த ஸ்கோரை 2-ஆம் இன்னிங்ஸில் பேட்டிங் விளையாட வந்த வங்கதேச அணி எளிதில் அடித்து வெற்றி பெற்றது.
வரலாற்று வெற்றியும் .. ஷாந்தோவின் பெருமித பேட்டியும் ..!
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது வரை பாகிஸ்தான் அணியை டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்டு ஒரு போட்டியைக் கூட வங்கதேச அணி வெற்றி பெற்றது இல்லை. ஆனால், நேற்று இந்த வரலாற்றை மாற்றி அமைத்தது வங்கதேச அணி.
இந்த வெற்றியைத் தொடர்ந்து வங்கதேச அணியின் கேப்டனான ஹசன் சாந்தோ பத்திரிகையாளர்களிடம் பெருமிதமாகப் பேட்டி அளித்தார். அவர் பேசிய போது , “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. பாகிஸ்தானில் நாங்கள் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக நாங்கள் கடினமாகப் பயிற்சி செய்தோம்.
ஷகிப், ஷட்மன், இஸ்லாம், மெஹிதி ஹசன், லிட்டன்தாஸ், மொமினுல் ஹக்இ, முஷ்பிகுர் ரஹிம் ஆகிய வீரர்கள் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக விளையாடி வருகிறார். சோர்வு என்பதை அறியாதவர். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு வெற்றியாக அமைந்துள்ளது.
அதற்குக் காரணம் கடந்த மாதம் வங்கதேசத்தில் கடினமான சூழ்நிலை நிலவியது. இன்னும் அதில் சில பிரச்சினைகள் இருக்கிறது. இருந்தாலும் இந்நேரத்தில் இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு முகத்தில் சிரிப்பைத் தரும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றியைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”, என ஹசன் சாந்தோ கூறி இருந்தார்.