தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடுவர்கள் பேட்டை சோதனை செய்வது எதற்காக என்பது குறித்து கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

BAT CHECK

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென இந்த மாதிரியான சோதனைகளை செய்ததும் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து என்ன காரணம் என இணையத்தில் ஆர்வத்துடன் தகவலை தேட தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன காரணம் திடீரென இப்படியான விதிமுறை கொண்டுவந்தது எதற்கு என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிகளில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளின் அளவை களத்தில் உள்ள அம்பயர்கள் நேரடியாக பரிசோதிக்க அனுமதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சில வீரர்கள் விதிமுறைகளை மீறி பெரிய அளவிலான பேட்டுகளைப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தான். இதற்கு முன்பு, பேட் பரிசோதனைகள் ஆட்டத்திற்கு முன்பு அணியின் ஆடை அறையில் மட்டுமே நடைபெற்றன.

ஆனால், சில வீரர்கள் பரிசோதனைக்கு ஒரு பேட்டைசோதனையின் போது சமர்ப்பித்துவிட்டு, ஆட்டத்தில் வேறு பேட்டைப் பயன்படுத்தியதாக சந்தேகங்கள் எழுந்தன. இந்தக் குறைபாட்டை சரிசெய்ய, பிசிசிஐ களத்தில் நேரடி பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் புதிய நடைமுறையின் முக்கிய நோக்கம், ஆட்டத்தில் நியாயத்தை உறுதி செய்வது தான் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. டி20 கிரிக்கெட்டில், பேட் உற்பத்தியாளர்கள் பேட்டின் “ஸ்வீட் ஸ்பாட்” (sweet spot) பகுதியை பெரிதாக்கி வைத்திருப்பதால் அந்த பேட்டை வைத்து பந்தை அடிக்கும்போது இன்னும் அதிகமான சக்தியுடன் பந்து பறப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது.

எனவே, 2025 சீசனில் 19 முறை 200+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன, இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்று முறை 260+ ரன்களை எட்டியுள்ளது. இதனால், விதிமுறை படி இனிமேல் வீரர்கள் பயன்படுத்தப்படும் பேட் சோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

பேட்டிங் அளவு என்ன?

விதிமுறைகளின் படி, பிரிவு 5.7-ன் கீழ்பேட்டின் மொத்த நீளம் 38 அங்குலங்கள் (96.52 செ.மீ)க்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்டின் முகப்பு (face) 4.25 அங்குலங்கள் (10.8 செ.மீ) அகலமாகவும், நடுப்பகுதி 2.64 அங்குலங்கள் (6.7 செ.மீ) ஆழமாகவும், விளிம்பு (edge) 1.56 அங்குலங்கள் (4.0 செ.மீ) தடிமனாகவும் இருக்க வேண்டும். பேட்டின் கைப்பிடி மொத்த நீளத்தில் 52% க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், பேட் ஒரு “பேட் கேஜ்” (bat gauge) எனப்படும் கருவியின் வழியாக எளிதாக செல்ல வேண்டும். அந்த கருவி வழியாக எளிதாக செல்லவில்லை என்றால் வேற பேட்டை மாற்றவேண்டும்.

பரிசோதனை செய்யும் முறை? 

களத்தில் உள்ள அம்பயர்கள், “ஹோம்-வடிவ பேட் கேஜ்” (home-shaped bat gauge) எனப்படும் முக்கோண வடிவ பிளாஸ்டிக் கருவியைப் பயன்படுத்தி பேட்டை பரிசோதிக்கின்றனர். இந்தக் கருவியின் வழியாக பேட் எளிதாக செல்லாவிட்டால், அது விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும். பரிசோதனை பொதுவாக ஆட்டத்தின் இடைவேளைகளில் அல்லது அம்பயருக்கு சந்தேகம் ஏற்படும் போது நடைபெறுகிறது. நடப்பாண்டில் கூட ஹர்திக் பாண்டியா, மற்றும் சுனில் நரேன் ஆகியோருடைய பேட்டிங் சோதனை செய்யப்பட்டது.

வீதி மீறினால் என்ன நடக்கும் ? 

விதிமுறைகளை மீறிய பேட் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த பேட் உடனடியாக பறிமுதல் செய்யப்படும், மேலும் வீரர் மற்றொரு விதிமுறைக்கு உட்பட்ட பேட்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும், வீரருக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். இன்னும் விதிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்