உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கான நடுவர்கள் யார்..? வெளியான தகவல்.!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அணியும், ஆஸ்திரேலிய அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதியது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் (மேட்ச் ரெப்ரீ) மற்றும் கள நடுவர்களாக (அம்பயர்) யார் யார் செயல்பட உள்ளனர் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ கள நடுவர்களாகவும், ஜோயல் வில்சன் 3-வது நடுவராகவும், ஆண்டி பைகிராப்ட் போட்டி நடுவராகவும் (மேட்ச் ரெப்ரீ) செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.