எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது -தோனி வருத்தம்
எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்காக தடுமாறி வருகிறது.சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றிகள் ,5 தோல்விகள் அடங்கும்.நேற்று பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.இதனால் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.
பெங்களூர் அணியுடன் அடைந்த தோல்விக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கூறுகையில் ,கடைசி நான்கு ஓவர்களில் எங்கள் அணியினர் இன்னும் சிறப்பாக பந்துவீசியிருக்க வேண்டும்.எங்கள் அணியின் பேட்டிங்கை சரிசெய்ய வேண்டியது அவசியம்.எங்கள் அணியினர் பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டியது அவசியம் . இனி வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்கள் ஆட வேண்டும்.எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது. கப்பலில் உள்ள ஒரு ஓட்டையை அடைக்க முயற்சி செய்வதற்குள் மற்றொரு ஓட்டை வந்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.