நாளை எனது கடைசி போட்டி.. ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டரும், 2019 உலகக் கோப்பை வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என மூன்று வடிவங்களில் விளையாடுவது தனக்கு சிரமமாக உள்ளதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
31 வயதான ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்ஹாமில் உள்ள தனது சொந்த மைதானத்தில் நாளை களமிறங்கவுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை (ஒருநாள் கிரிக்கெட்) இறுதிப் போட்டியில் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டம் எப்போதும் நினைவில் இருக்கும்.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தது போட்டியை சூப்பர் ஓவருக்கு அனுப்ப உதவியது, இங்கிலாந்து தனது முதல் 50 ஓவர் உலகக் கோப்பை பட்டத்தை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வென்றது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் ஸ்டோக்ஸ் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2919 ரன்கள் குவித்து 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பென் ஸ்டோக்ஸ், நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்று அவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
❤️???????????????????????????? pic.twitter.com/xTS5oNfN2j
— Ben Stokes (@benstokes38) July 18, 2022