“திலக் வர்மா தான் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்”…புகழ்ந்து தள்ளிய அம்பதி ராயுடு!
அனைத்து வடிவிலான வீரராகவும் திலக் வர்மாவால் விளையாட முடியும் என நான் நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா செய்த சம்பவம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்தது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். இவருடைய இந்த அதிரடி ஆட்டம் தான் இந்திய அணி வெற்றிபெறவும் காரணம்.
இந்நிலையில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரை பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்.
அவர் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு ஹைதராபாத்தில் வளர்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன், அவர் நான்கு அசாதாரணமான ஆட்டங்களை ஆடியுள்ளார். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு
கேப்டனானதிலிருந்து, அவர் திலக் வர்மாவுக்கு கொடுத்த ஆதரவு மற்றும் அவர் மீது காட்டிய நம்பிக்கையை தன்னுடைய பேட்டிங் மூலம் திலக் காட்டி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியாவுக்கு ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளார், அவர் அனைத்து வடிவிலான வீரராகவும் திலக் வர்மாவால் விளையாட முடியும் என நான் நினைக்கிறேன். தொடர்ச்சியாக அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்து பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எல்லா வடிவங்களிலும் அவர் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங்கில் கோணங்கள் மிகவும் முக்கியம். அது திலக் வர்மா பேட்டிங்கில் நன்றாகவே தெரிந்தது. வேகப்பந்துகளை அவர் எதிர்கொள்ளும்போது அந்த வேகத்தைப் பயன்படுத்தி பந்துகளை எங்கு வேண்டுமானாலும் அடித்தார். இது ஒரு சரியான அணுகுமுறை” எனவும் திலக் வர்மா பேட்டிங் பற்றி அம்பதி ராயுடு பேசினார்.