இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்தது அசத்தியுள்ளார்.
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, அபிஷேக் சர்மா 12, சஞ்சு சாம்சன் 5, சூர்யகுமார் யாதவ் 12, துருவ் ஜூரல் 4, என ஆட்டமிழந்தனர். எனவே, போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றிபெறும் என்ற மனநிலைக்கும் ரசிகர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் களத்தில் நின்ற என்னை மறந்துவிட்டீர்களே என்கிற வகையில் திலக் வர்மா அதிரடியாக விளையாடினார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். இவருடைய இந்த அதிரடி ஆட்டம் தான் இந்திய அணி வெற்றிபெறவும் காரணம். இவருடைய அசத்தலான ஆட்டத்தால் 19.2 ஓவர்களில் இந்தியா 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் அதிரடியாக விளையாடி திலக் வர்மா சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால், டி20 வரலாற்றில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட் இழக்காமல் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் இடம் பிடித்த சாதனையில் தான்.
கடந்த 4 (107*, 120*, 19*, 72*) போட்டிகளில் மொத்தமாக 318 ரன்கள் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 வரலாற்றில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட் இழக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு அடுத்ததாக ஆரோன் பின்ச் (240), ஷ்ரேயாஸ் ஐயர் (240), டேவிட் வார்னர் (239 ரன்கள்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.