அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்த திலக் வர்மா..!
இந்தியா இன்று நடைபெற்ற அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. பங்களாதேஷுக்கு எதிராக திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். இப்போட்டியில் திலக் வர்மா தனது அரை சதத்தை அடித்தவுடன் ஜெர்சியை தூக்கி தனது உடலில் வைத்துள்ள டாட்டூவை கேமராவில் காட்டினார். போட்டி முடிந்ததும் இந்த கொண்டாட்டத்திற்கான காரணத்தை திலக் வர்மாவிடம் கேட்டபோது, கடந்த சில போட்டிகள் சிறப்பாக அமையாததால், சற்று மன உளைச்சலில் இருந்தேன்.
அடுத்த போட்டியில் அரை சதம் அடிப்பேன் என்று பெற்றோரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அடித்த அரை சதத்துடன் எனது நம்பிக்கை மீண்டும் திரும்பியது. அந்த டாட்டூ என் அம்மாவுடன் சேர்த்து என்னுடைய சிறந்த நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்துள்ளேன் என கூறினார். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது திலக் வர்மா தனது முதல் டி20 அரைசதம் அடித்தபோது அதை சமைராவுக்கு அர்ப்பணித்தார். திலக் வர்மா டி20 போட்டியில் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக அடைந்தனர். இப்போட்டியில் சாய் கிஷோர் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை இந்தியா அணியுடன் விளையாடும்.