முடிச்சி விட்டீங்க போங்க.., சில நிமிடங்களில் விற்று தீர்ந்த CSK – RCB டிக்கெட்கள்!
மார்ச் 28-ல் நடைபெறும் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டது.

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்து வரும் மார்ச் 28இல் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் விலை ரூ .1,700-ல் இருந்து ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 10.15க்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்த டிக்கெட்கள் விற்றுவிட்டன. அந்தளவுக்கு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் CSK – RCB போட்டிக்கு அதீத ஆர்வம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த M.A.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் ஆகும். ஆனால், ஐபிஎல் போட்டிகளின்போது பாதுகாப்பு, VIP பகுதிகள், ஊடகம் மற்றும் ஸ்பான்சர்களுக்காக ஆயிரக்கணக்கில் டிக்கெட்கள் ஒதுக்கப்படும். இதனால் பொதுவாக 33,500 முதல் 40,000 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.