சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாயில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளன என ஐசிசி அறிவித்துள்ளது.

ICC Champions trophy 2025

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்தும் பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன.

ஐசிசி தரவரிசை அட்டவணையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளை 2ஆக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.

இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியா துபாயில் விளையாடும் 3 லீக் போட்டிகளான பிப்ரவரி 20 வங்கதேசதிற்கு எதிரான போட்டி, பிப்ரவரி 23 பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, மார்ச் 2 நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டி ஆகியவைகளுக்கு துபாய் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இன்று (பிப்ரவரி 3) மாலை 4 மணிக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக தொடங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானம் துபாயில் அடிப்படை டிக்கெட் விலை AED 125 (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 3 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடக்க விலையே ஆகும். இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியும் துபாயில் தான் நடைபெறும். இது அரையிறுதி ஆட்ட முடிவுகளை தொடர்ந்து டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வரும் எனக் கூறப்படுகிறது.

அதே போல பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நேரடி டிக்கெட்டுகளை வாங்க விரும்புவோருக்கு இன்று (பிப்ரவரி 3) முதல் பாகிஸ்தான் நேரப்படி மாலை 4 மணிக்கு நாடு முழுவதும் 26 நகரங்களில் உள்ள 108 டிக்கெட் விநியோக மையங்களில் கிடைக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்