சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த திசாரா பெரேரா..!
இலங்கையின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
32 வயதான பெரேரா இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 2009 ஆம் ஆண்டில் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கிய பெரேரா, இலங்கைக்காக 6 டெஸ்ட், 166 ஒருநாள் மற்றும் 84 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.
இதில் டெஸ்ட் போட்டிகளில் 11, ஒருநாள் போட்டிகளில் 175, டி 20 போட்டிகளில் 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இது தவிர, அவர் பேட்டிங்கில் டெஸ்ட் போட்டிகளில் 203 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2338 ரன்களும் மற்றும் டி 20 போட்டிகளில் 1204 ரன்களும் எடுத்துள்ளார்.
இவர் சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு சதம் அடித்துள்ளார். 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக 140 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில், இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கூறப்பப்ட்டது.
அதன் பிறகு பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அவர் தனது முடிவை தேர்வாளர்களுக்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார்.
பெரேரா 2016 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.