‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி மிகச்சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியை 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருட்டியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை பஞ்சாப் சேஸ் செய்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சின் போது முதல் ஓவரை வீசுவதற்கு தீபக் சஹர் வந்தார். அப்போது முதல் ஓவரின் 3-வது பந்தில் ஓடி வரும் பொழுது காயம் காரணமாக வெளியேறி இருப்பார். அதன் பிறகு அந்த ஓவரை ஷரதுல் தாகூர் வீசி இருப்பார். அதை தொடர்ந்து தீபக் சஹரின் உடல் நிலை குறித்தும், சிஎஸ்கே அணியின் நேற்றைய போட்டியின் மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பத்திர்கையாளர்கள் சந்திப்பில் ஸ்டீபன் ஃப்ளெமிங் பேசி இருந்தார்.
அவர் பேசிய போது, “தீபக் சாஹர் உடல் நிலை நன்றாக இல்லை, அவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவரை பிசியோ மற்றும் டாக்டர்கள் பொறுப்பெடுத்து கண்காணித்து கொண்டு வருகின்றனர். அதே சமயம் எங்கள் அணியில் இருக்கும் இலங்கை வீரர்கள் எந்த நேரத்திலும் விசா பெறவதற்கு நாட்டிற்கு திரும்ப தயாராக உள்ளனர். இந்த தொடரில் அவர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், ரிச்சர்ட் க்ளீசன் இன்று நன்றாக பந்து வீசினார்.
மேலும், துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலில் இருக்கிறார். இப்படி, அணியில் இன்று சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. விரைவாக ஒரு புதிய திட்டத்திற்கு ஏற்ப அவர்கள் விளையாடவும், ஒரு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடவும் சமயம் இல்லாத காரணத்தால் இந்த போட்டியில் சற்று திணறினோம்”, என்று போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயிற்சியாளர் ஃப்ளெமிங் பேசி இருந்தார்.