ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!
ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்பதற்கான காரணத்தை கூறி இருக்கிறார் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகத் தனது பெயரை ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார். 42 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
Read More :- ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?
இந்த நிலையில் அவர் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை ரூ.1.25 கோடிக்குப் பதிவு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஏலத்திலும் இவர் தனது பெயரைப் பதிவு செய்திருந்த நிலையில், எந்த அணியும் இவரை எடுக்காதது வருத்தம் அளித்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இவரை எந்த அணி எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இத்தனை வயது ஆனாலும் எதற்காக ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் எனும் கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. இதற்கான பதிலை அவரே சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “நான் இன்னும் விளையாட முடியும் என்று நினைக்கும் ஏதோ ஒன்று எனக்குள் நிச்சயமாக இருக்கிறது. நான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியது கிடையாது. அதன் அனுபவம் எப்படி இருக்கும் என்று ஒருபோதும் நான் கண்டதில்லை.
பல காரணங்களுக்காக ஒரு வீரராக நான் இன்னும் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் ஐபிஎல் தொடருக்கு எனது பெயரைப் பதிவு செய்துள்ளேன்”, என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
அவர் இப்படிக் கூறிய பிறகு அவருக்கு மதிப்பளித்து ஐபிஎல் அணிகள் அவரை அணியில் எடுப்பதற்கு ஏலத்தில் போட்டியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை அணி இது போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் விளையாட வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சென்னை அணி இந்த ஏலத்தில் ஆண்டர்சனை குறி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.