“த்ரில் வெற்றியின் ரகசியம் இது தான்” – டெல்லி வீரர் அசுதோஷ் சர்மா.!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குறித்து டெல்லி அணி வீரர் அஷுடோஷ் ஷர்மா, கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி விளையாடுனேன் என்று கூறியுள்ளார்.

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி அணியை, Impact Player ஆக வந்த அசுதோஷ் சர்மா அபாரமாக விளையாடி, வெற்றி பெற வைத்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை விளாசினார். இப்படி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அசுதோஷ் சர்மா நேற்று சமூக வலைத்தளம் முழுவதும் ட்ரென்டிங் ஆகிவிட்டார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குறித்து டெல்லி அணி வீரர் அஷுடோஷ் ஷர்மா ஊடங்களிடம் பேசுகையில், “கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோஹித் ஷர்மா சிங்கிள் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்ஸர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
அக்சர் படேல், பயிற்சியாளர்கள் மற்றும் மற்ற அனைத்து வீரர்களும் எங்களுடன் இருந்தனர், கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், நான் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றினேன்.
கேப்டன் மற்றும் முழு அணியின் ஆதரவைப் பெறுவதை விட சிறந்த விஷயம் எதுவுமில்லை. எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது, என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.