டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் இவர் தான்! ‘ஹர்திக் பாண்டியா’ செய்த பலே சம்பவம்!
இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட் போட்டியில் அடுத்ததாக ஒரு பெரிய மைல்கல்லை நிகழ்த்தியுள்ளார்.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதும் வழக்கம். அதில், நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் தான் ஹர்திக் பாண்டியா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
நேற்றைய தினம் இந்தூர் மைதானத்தில், குஜராத் அணிக்கும் பரோடா அணிக்கும் இடையே போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவருக்கு 184 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து, 185 ரன்களை நோக்கி சேசிங் செய்த பரோடா அணி 19.3 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து வெற்றியும் பெற்றது.
ஹர்திக் பாண்டியா சாதனை :
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது ஹர்திக் பாண்டியா தான். சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 35 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். இதில், 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். ஏற்கனவே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் அவர் இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று அவர் அடித்த இந்த 74 ரன்களையம் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் 5067 ரன்களை எடுத்துள்ளார். அதே போல பவுலிங்கிலும் அவர் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டியில் 5000 ரன்களை கடந்து 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா 3684 ரன்களும், 225 விக்கெட்டுகளும் எடுத்து 2-வது இடத்திலும், அக்சர் பட்டேல் 2960 ரன் மற்றும் 227 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.