என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!
தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,கவுதம் கம்பீர் FIR பதிவு செய்யுமாறும் புகாரில் தெரிவித்துள்ளார்.

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை தேடிப்பிடிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சுழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு நாள் பிறகு, ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் மரண அச்சுறுத்தல் தனக்கு வந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசாருக்கு அனுப்பிய FIR-இல் என்னை கொலை செய்து விடுவதாக ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற அமைப்பில் இருந்து மிரட்டல் வந்தது. எனவே, தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி காவல்துறையின் ராஜிந்தர் நகர் காவல் நிலையத்தின் SHO மற்றும் மத்திய டெல்லி DCP ஆகியோர், இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருவதாகவும், கம்பீர் மற்றும் அவரது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கம்பிருக்கு கொலை மிரட்டல் வந்தது முதல் முறை இல்லை ஏற்கனவே, கடந்த ஆண்டு 2021 நவம்பரில், அவர் பாஜக எம்பியாக இருந்தபோது, ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் மிரட்டல் வந்தது.
அப்போதும் கம்பீர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து இப்போது மீண்டும் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இந்த மிரட்டலானது கம்பிருக்கு வந்த காரணத்தால் அவர் உடனடியாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு கம்பீர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவில் ” இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்தியா பதிலடி கொடுக்கும்” என பதிவிட்டு இருந்தார்.