‘தொடர் வெற்றிக்கு காரணம் அவர்கள் தான் ..’ ! பவுலர்களை புகழ்ந்த கே.எல்.ராகுல் ..!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி, குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பிறகு லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற பிறகு வெற்றியின் காரணத்தை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கி பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களிடம் இருக்கும் இளம் பந்துவீச்சுக் குழுவிற்கு நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த விக்கெட்டில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு யோசனை அவர்களுக்கு கிடைக்கும். மேலும், அவர்களும் விளையாடிய அனைத்து போட்டியிலும் அதற்கு ஏற்றவாறு நன்றாகவே பந்து வீசுகிறார்கள்.
நாங்கள் முதலில் பேட் செய்து 160+ ஸ்கோர் அடித்த எந்த ஒரு போட்டியையும் நாங்கள் தோற்றதே இல்லை என்று ஒரு பதிவு சொல்கிறது. இதற்கு காரணம் எங்கள் இளம் பந்து வீச்சாளர்கள் தான். மேலும், நாங்கள் விளையாடிய இடம் மற்றும் சூழ்நிலைகளின் காரணமாகவும் இந்த வெற்றிகளை பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். கடந்த முறை நாங்கள் இங்கு லக்னோவில் விளையாடியபோது பிட்சில் பந்தின் வேகம் மிக குறைவாகவே காணப்பட்டது.
மேலும், இது குறைந்த ஸ்கோரைப் பெற்ற மைதானம் என்பதால் நாங்கள் ரன் அடிக்கவிடாமல் தடுத்தோம். கடந்த சீசனிலும் இதே வீரர்கள் எங்கள் அணியில் விளையாடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும், அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரி செய்துள்ளனர். அவர்கள் விளையாட போகும் பிட்சை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். போட்டியின் பயிற்சியின் போதும் அவர்களுடன் இந்த பிட்ச்சின் தாக்கம் குறித்து அதிகம் விவாதிக்க முயற்சிப்பேன்”, என்று போட்டி முடிந்த பிறகு லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பேசி இருந்தார்.