‘ஒரே ஒரு வாய்ப்பு தான்…’ கம்பீரின் பதவிக்கு செக் வைத்த பிசிசிஐ?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடருக்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் மாற்றப்படலாம் எனும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், பயிற்சியாளராகப் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது. இந்தியா அணியின் தொடர் டெஸ்ட் தோல்வியின் காரணமாக, அடுத்ததாக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பது குறித்தே அவரது பதவிக்கலாம் தீர்மானிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் குறைந்தது 4 போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து வருகின்றனர். அப்படி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியும்.
முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்தியா அணி 3-0 எனக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொடரில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி வைட்-வாஷ் செய்து சாதனைப் படைத்தது. இதனால், தான் கம்பீரின் பயிற்சி விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இதனால், ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் இந்திய அணி சரிவர விளையாடவில்லை என்றால் கம்பீரை மாற்றிவிட்டு வேற ஒருவரை இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனால், இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் கம்பீருக்கு வாழ்வா? சாவா? எனும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி 5 தொடர்களில் விளையாடி, அதில் 3 தொடர்களில் வெற்றி பெற்று, 2 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. அதில், இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரையும், நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரும் அடங்கும். இது கம்பீருக்குப் பெரிய இடியாக அமைந்து இருக்கிறது.
இதைச் சரி செய்ய பார்டர்- கவாஸ்கர் தொடரை இந்திய அணி 5-0 என வயிட்-வாஷ் செய்தாக வேண்டும், என்றாலே கம்பீர் மீது எழுந்துள்ள இந்த சர்ச்சை நீக்கப்பட்டு மீண்டும் அணியின் தலைமை பயிற்சியாளராகத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது.