ரிஷப் பண்ட் இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை- ரிக்கி பாண்டிங்..!
ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.
ஐபிஎல் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அனுபவம் இருப்பதால் ரிஷப் பண்ட் சர்வதேச கேப்டனாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் வரவிருக்கும் ஆண்டுகளில் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான குணங்கள் இருப்பதாக உணருகிறேன். அவர்கள் உண்மையில் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
ரோஹித் மும்பையில் பொறுப்பேற்றபோது அவரும் மிக இளைஞராக இருந்தார். மேலும், அவர் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார். அதேபோல ரிஷப் பண்ட் வயது இப்போது 24 வயது தான். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலும், இந்தியன் பிரீமியர் லீக்கிலும் வேகமாக முன்னேறி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சாதித்ததை ரிஷப் பண்ட்டால் பின்பற்ற முடியும் என்று பாண்டிங் கூறினார். ரிஷப் பண்ட்டின் பயணம் ரோஹித் சர்மாவைப் போலவே இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன என கூறினார்.
கடந்த சீசனில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் பொறுப்பை ஏற்றார். நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி- மும்பை அணி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.