தொடர்ச்சியாக சூர்யா கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை! முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்பீச்!
INDvSL : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார். இந்நிலையில், இந்தியாவின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது ஒரு குறுகிய காலத் திட்டம் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ் ” சுப்மன் கில் அவரது சொந்த விளையாட்டில் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும். சில முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவுக்காக அவர் சிறப்பாக விளையாடியபோதிலும், மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்று.
இந்த அனுபவங்களை எல்லாத்தையும் அவர் வளர்த்து கொண்டால் மட்டும் தான் அடுத்ததாக வருங்காலத்தில் அவரை கேப்டனாக நியமனம் செய்ய முடியும். உங்கள் ஆட்டத்தில் மேலும் முழுமையாக கவனம் செலுத்துங்கள். தற்போதைய சூழ்நிலையில், கில் போன்ற ஒருவர் உடனடி கேப்டன் தேர்வாக இருக்க முடியாது. எனவே, அவரைப் போல ஒரு இயல்பான தலைவரை தேடும் இடையில், நாங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியதுதான்.
கில் போல ஒருவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பொறுப்பில் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர் இப்போது அந்த நிலைக்கு தயாராகவில்லை. , எனவே மேலும் அனுபவம் கொண்ட ஒருவரை இந்த இடத்துக்கு கொண்டு வருவது அறிவார்ந்த முடிவாகும். சூர்யகுமார் யாதவ் இப்போதைக்கு அந்த பொறுப்பை ஏற்கும் முறையில் அமைந்திருக்கிறார். அவர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதில் உண்மையில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
கவுதம் கம்பீர் தற்போது ஒரு இயல்பான தலைவரைத் தேடுகிறாரே தவிர, அதற்கு தகுதியானவராக யாரும் தோன்றவில்லை. எனவே, சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக ஒரு அணியின் கேப்டனாக இருப்பார் என்பதற்கு வாய்ப்பு இல்லை .ஒருவேளை ஒரு இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்கலாம், அடுத்த இரண்டு வருடங்களில் கில் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார்” என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.