அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ரோஹித் சர்மா, தோனியின் தற்போதைய ஐபிஎல் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ரோஹித் கடந்த 3 ஐபிஎல் போட்டியிலும் சேர்த்து மொத்தமாக 21 ரன்கள் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர்களை ஒப்பிட்டு பேசும் வசை பேச்சுகளும் எழ தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலோச்சி இருந்தாலும் தற்போது அவர்களால் இளம் படையினருடன் போட்டியிடும் அளவுக்கு அவர்களின் விளையாட்டு திறன் இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.
‘ஃபினிஷர்’ தோனி மிஸ்ஸிங்
இந்த வசைபாடுகளில் நடப்பு ஐபிஎல்-ல் முதல் ஆளாக சிக்கி இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளம் எம்.எஸ்.தோனி. முன்பு ஆகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்றும் 5 ஐபிஎல் கப் வாங்கிய கேப்டன் என்றும் புகழ்ந்த ரசிகர்கள் பலர் தற்போது இவரது ஃபார்ம் கண்டு சற்று மனம் நொந்துள்ளனர். அதிலும் லேட்டாக அனைத்து பேட்ஸ்மேன்களும் களமிறங்கிய பின்னர் அவர் களமிறங்குவது, சில போட்டியில் 9வது வீரராக களமிறங்கியது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே பேசுபொருளாக மாறியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது இடத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஆனால், அணியின் தோல்வியைத் அவரால் தடுக்க முடியவில்லை. இந்த ஆட்டம் குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட விமர்சித்தனர். அவர்கள் கூறுகையில், தோனியின் தற்போதைய அதிரடி ஆட்டத்திறனைப் பயன்படுத்தி மேல் வரிசையில் ஆடினால் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறுகின்றனர்.
தோனியால் முடியவில்லை
ஆனால், CSK அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங், தோனிக்கு முன்பு போல உடல்தகுதி இல்லை. அதனால், அவரால் 10 ஓவர்கள் நிலைத்து பேட்டிங் ஆட முடியாது. எனக் கூறி வருகிறார். மேலும், கடந்த மார்ச் 30-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது. அதனை அடித்து அணியை வெற்றி பெற வைக்க தோனியால் முடியவில்லை. இதனால், அவரது பழைய மாயாஜாலம் குறைந்துவிட்டது என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித்-ன் ஃபார்ம்
தற்போது அதேபோன்ற விமர்சனம் ரோஹித் மீதும் எழுந்துள்ளது. சர்வதேச டி20 போட்டியில் ஓய்வு பெற்ற ரோஹித் அடுத்து விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி சராசரியாக 40 ரன்களை கடந்த பிறகு அவுட் ஆகிவிடுவார். அதே பாணியில் ஐபிஎல்-ல் விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. கடைசியாக விளையாடிய 3 ஐபிஎல் போட்டிகளிலும் ரோஹித் அடித்த மொத்த ரன்கள் வெறும் 21 தான்.
21 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித், ஐபிஎல் 2025-ல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் மூன்று போட்டிகளில் அவர் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக, சென்னைக்கு எதிராக டக் அவுட், குஜராத் அணிக்கு எதிராக 8 ரன்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இம்பேக்ட் பிளேயர்
ரோஹித் MI-யை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் என்றாலும், அவரது தற்போதைய ஃபார்ம் கேள்விக்குறியாகியுள்ளது. ரோஹித்தை மும்பை அணி 2025 ஐபிஎல்-ல் ரூ.16.30 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. கடைசி போட்டியில் (கொல்கத்தாவுக்கு எதிராக) ரோஹித் பிளேயிங் 11-ல் கூட இடம்பெறவில்லை. அவர் 20 ஓவர்கள் பீல்டிங் செய்யாமல், இம்பேக்ட் பிளேயராக இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கி 13 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் பெவிலியனில் ஓய்வு எடுக்கிறார் என நெட்டிசன்கள் ரோஹித்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரோஹித் , தோனி இருவரும் டி20 கிரிக்கெட்டில் பங்காற்றிய விதம் பற்றியும், தங்கள் அணிகளை வெற்றியோடு வழிநடத்தியது பற்றியும் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவர்களின் உடல் வலிமையையும் , மன வலிமையையும் ஒத்துப்போனால் இன்னும் அளப்பரிய சாதனைகளை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் அடுத்தடுத்த போட்டிகளை எதிர்நோக்குகின்றனர்.