“அவுங்க 4 பேரு உள்ள…புவி வெளியே”…SRH பிளானை கணித்த முன்னாள் வீரர்!
புவனேஷ்வர் குமாரை ஐபிஎல் 2025 ஏலத்தில் SRH அணி தக்க வைத்துக்கொள்வது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிரடியான ஆட்டத்தை காட்டி அனைத்து அணியையும் நடுங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 287 ரன்கள் அடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது.
அதற்கு முக்கியமான காரணமே அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் என்றே சொல்லலாம். இவர்களுடைய அதிரடியான ஆட்டம் காரணமாகவே இந்த ஆண்டு ஹைதாராபாத் அணி சிறப்பாக செயல்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு மெகா ஏலம் நடத்தப்பட இருப்பதால் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் அணி தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பேட்டிங்கில் அவர்கள் அணிக்கு தூண் என்று சொன்னால் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தான் தூண் என்றே சொல்லாம். பல ஆண்டுகளாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அணி விடுவிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது ” கண்டிப்பாக SRH அணி டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், ஹென்ரிச் கிளாசென் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை தக்கவைத்துக் கொள்வார்கள். இவர்கள் எல்லாம் வெளியேவே விடமுடியாத தரமான வீரர்கள் என்பதால் ஹைதராபாத் அணி கண்டிப்பாக தக்க வைத்துக்கொள்ளும் ” என்பதை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “அந்த வீரர்களை தக்க வைத்துக்கொண்டால் நிச்சியமாக புவனேஷ்வர் குமாரை தக்க வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்த ஏலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் விளையாடுவதற்கான ஏலம் என்பதால் நான் அவரை தக்க வைப்பார்கள் என நினைக்கவில்லை” எனவும் கூறினார்.
ஹைதராபாத் அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் புவனேஷ்வர் குமாரை அடுத்த ஆண்டு அணி கழட்டிவிடுவதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. உண்மையில் அணி அவரை ஏலத்தில் விடுவிக்குமா? அல்லது தக்க வைத்துக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..