‘அவர்களது திறமை எங்களை திணற வைத்தது’! தோல்விக்கு பிறகும் எதிரணியை வாழ்த்திய வில்லியம்சன்!
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 160 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்தது.
அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக விளையாடியது. இதன் காரணமாக நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ரஷீத் கான் மற்றும் ஃபசல்ஹக் பாரூக்கி இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சர்வேதச கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்த போட்டி முடிவடைந்த பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தோல்வியின் காரணங்களை விளக்கி கூறி இருந்தார். அவர் பேசுகையில், “ஆப்கானிஸ்தானன் அணிக்கு எனது வாழ்த்துக்கள், அவர்கள் எல்லாவற்றிலும் எங்களை விஞ்சி நன்றாக விளையாடினார்கள்.
அவர்கள் நல்ல ஸ்கோரை எடுக்க முழு மூச்சாக பேட்டிங்கில் ஈடுபட்டனர். நாங்கள் இந்த தோல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அடுத்த சவாலுக்குத் திரும்பி வர வேண்டும். இந்த போட்டிக்கான பயிற்சிகள் நடைபெறாமல் இருந்த போதும் கூட எங்கள் அணியின் வீரர்கள் நன்றாக போட்டிக்கு தயாரானார்கள், ஆனால், இந்த போட்டி கடினமாக இருந்தது, எங்கள் அணிக்கு கூட்டாண்மை தேவை. மேலும், அவர்கள் எங்களுக்கு எதிராக உபயோகித்த திறமைகள் எல்லாம் கடினமாக இருந்தது அது எங்களை திணற வைத்தது”, என கூறி இருந்தார்.