ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!
ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய ரன்களை குவித்தது. இந்த போட்டியை மகாராஷ்டிராவில் கோலப்பூரில் உள்ள ஹன்மந்த்வாடி பகுதியில், ஐபிஎல் ரசிகர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து 278 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அப்போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா நன்றாக விளையாடி கொண்டிருக்கையில் திடீரென 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 63 வயதான பந்தோபந்த் பாப்சோ திபிலே என்ற சிஎஸ்கே ரசிகர் ஒருவர், ரோகித் சர்மா அவுட் ஆகிவிட்டார், இனி மும்பை அணி எப்படி இந்த இமாலய இலக்கை எட்டும் என கேலியாக பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரோஹித் ரசிகர்கள் 2 பேர் பாப்சோ திபிலேவை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் பாப்சோ திபிலே தலையில் வலுவான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிஎஸ்கே ரசிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ரோஹித் ரசிகர்களான, 50 வயதான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜே மற்றும் 35 வயதான சாகர் சதாசிவ் ஜான்ஜே ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், ஒரு விக்கெட்டால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில், ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்ததால், மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் ஆகியோர் ஏற்கனவே கோபத்தில் இருந்து இருக்கின்றனர். இந்நிலையில், பாப்சோ திபிலே கேலி செய்ததால் ஆத்திரமடைந்த இருவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.