இன்று முதல் நடைமுறைக்கு வரும் ‘ஸ்டாப் வாட்ச்’ ரூல்ஸ்..!
2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. போட்டியின் வேகத்தை அதிகரிக்க புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு போட்டியில் ஒரு ஓவர் முடித்து அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர்கள் 1 நிமிடத்திற்கு மேல் மூன்று முறை எடுத்துக் கொண்டால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த விதி தற்போது ஆண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் முதற்கட்டமாக சோதனைக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின் பயன் மற்றும் தீமைகள் கருத்தில் கொண்டு பிறகு நிரந்தரமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. இந்த விதி டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இருந்து இந்த விதி சோதனையில் தொடங்குகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
பேட்டிங் அணிக்கு 5 ரன்:
ஒரு ஓவர் முடிந்த பிறகு இரண்டாவது ஓவர் தொடங்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுக்கக்கூடாது அப்படி ஒரு போட்டியில் மூன்று முறை ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொணடால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். இதனால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். சில போட்டிகளில் முடிவை மாற்ற 1 ரன் கூட தேவைப்படும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விதி எதிரணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.