“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் ஸ்மிருதி மந்தனா மிதாலி ராஜின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 10-ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா அசத்தலான சாதனையை படைத்துள்ளார். எத்தனை ரன்கள் அடித்து என்ன சாதனை படைத்தார் என்பது பற்றி பார்ப்போம்..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ராணி என்று அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடிக்க தவறினால் கூட வரலாற்றில் இந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2011-ல் விளையாடியபோது படைத்தார். கிட்டத்தட்ட 111 இன்னிங்ஸ் விளையாடி தான் அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால், அவரை விட குறைவான இன்னிங்கிஸ் அதாவது, 95 இன்னிங்ஸில் 4,000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதைப்போல, ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க் 86 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா வீராங்கனை மெக் லானிங் 89 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களைக் கடந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 4,000 கடந்த வீராங்கனைகள்
- பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) 118 போட்டியில் 4844 ரன்கள்
- மெக் லானிங் (ஆஸ்திரேலியா) 103 போட்டியில் 4602 ரன்கள்
- ஸ்மிருதி மந்தனா (இந்தியா) 95 போட்டியில் 4001 ரன்கள்
- லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா) 101 போட்டியில் 4303 ரன்கள்
- கரேன் ரோல்டன் (ஆஸ்திரேலியா) 141 போட்டியில் 4814 ரன்கள்
- சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) 168 போட்டியில் 5838 ரன்கள்
- ஸ்டீபனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள் ) 160 போட்டியில் 5691 ரன்கள்
- மிதாலி ராஜ் (இந்தியா) 232 போட்டியில் 7805 ரன்கள்