இந்திய அணியின் அடுத்த தொடர்..! அட்டவணை முதல் ரசிகர்களின் கருத்துக்கள் வரை..!
INDvBAN : கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. அந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி துரதிஷ்டவசமாக இலங்கை தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்தது.
இதனால் இந்திய அணியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், பல தவறுகளை இந்திய அணி மாற்ற வேண்டும் எனவும் அணியை தொடருக்கு ஏற்றவாரு புதுப்பிக்க வேண்டும் எனவும் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்திய அணி அடுத்தாக ஒரு இடைவேளை எடுத்து கொண்டு வங்கதேச அணியுடன் ஒரு தொடரை விளையாடவுள்ளனர். அதன்படி வங்கதேச அணி, இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார். அது மட்டுமின்றி பயிற்சியாளரான கவுதம் கம்பீர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மொத்த வடிவத்தையும் மாற்றி அமைக்கவுள்ளதாக ஒரு தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி, நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், மேலும் டெஸ்ட் ஜாம்பவான் பவுளரான அஸ்வினுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும் படி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மேலும், இலங்கை தொடருக்கு அணியை அறிவித்த போது ருதுராஜ் கெய்க்வாட் பெயர் இல்லை என பல ரசிகர்கள், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால், இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கை தொடரில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா, வங்கதேசத்துடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்து வருகின்றனர். அதே போல இலங்கை டி20 தொடரில் இந்திய அணியை தலைமை தாங்கிய சூரியகுமார் யாதவ் இந்த வங்கதேசத்துடனான டி20 தொடரிலும் அணியின் கேப்டனாக தொடருவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கம்பீர் மேல் எழுந்துள்ள பல சர்ச்சைகளை நீக்குவதற்கு இந்த வங்கதேச தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால், இந்திய அணியை அவர் இந்த தொடர் வருவதற்குள் சிறப்பாக வடிவமைக்க வேண்டும். இந்த தொடரை வென்று எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஒரு பக்கம் அவரது ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
வங்கதேச தொடருக்கான அட்டவணை :
- செப்.19 – முதல் டெஸ்ட் போட்டி – சென்னை
- செப்.27 – 2வது டெஸ்ட் போட்டி – கான்பூர்
- அக்டோபர் 6 – முதல் டி20 போட்டி – ஹிமாச்சல் பிரதேஷ்
- அக்டோபர் 9 – 2வது டி20 போட்டி – டெல்லி
- அக்டோபர் 12 – 3வது டி20 போட்டி – ஹைதராபாத்