வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இதனையடுத்து, இன்று 2-வது ஒரு நாள் போட்டி வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அதிரி புதிரான ரன்களை குவித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை குவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணமே, இந்திய அணியின் அதிரடி வீராங்கனையாக மாறிய ஹர்லீன் தியோல் தான். ஏனென்றால், இந்த போட்டியில் அவர் சதம் விளாசினார்.
யார் இந்த ஹர்லீன் தியோல்
இதுவரை இந்திய அணிக்காக ஹர்லீன் தியோல் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 15 ஒருநாள் போட்டிகளில் 436 ரன்கள் எடுத்துள்ளார்.இந்தப் போட்டிக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்லீனின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த 77 ரன்கள், தற்போது 115 ரன்களாக மாறியுள்ளது. அவரது டி20 வாழ்க்கையைப் பார்த்தால், அவர் இந்தியாவுக்காக 24 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் 251 ரன்கள் எடுத்துள்ளார்.
வாய்ப்பு கொடுத்த கேப்டன்
எனவே, இதற்கு முன்னதாக இந்தியாவுக்காக சில போட்டிகளில் ஹர்லீன் தியோல் விளையாடி இருந்தாலும் கூட, பெரிய அளவில் திரும்பி பார்க்கக்கூடிய அளவுக்கு விளையாடமுடியவில்லை. எனவே, அவர் சரியாக விளையாடமாட்டார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. அப்படி இருந்தாலும் அதற்கு அவர் பதிலடி தனது பேட்டிங்கின் மூலம் கொடுப்பார் என அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு விளையாட கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வாய்ப்பு வழங்கினார்.
எனவே, கிடைத்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிரடியாக விளையாடிய ஹர்லீன் தியோல் 16 பவுண்டரிகள் விளாசி 103 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். அவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்துவிட்டு பலரும் அவருடைய ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் இது என்பதால் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.