இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஆசிய கோப்பை தொடர்! அனல் பறக்கும் முதல் போட்டி.. பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு.!

Pakistan vs Nepal

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பாகிஸ்தானில் முல்தானில் நடைபெறுகிறது. இதில், உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் 2023 ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும், இலங்கையும் இணைந்து தொடருக்கான போட்டிகளை நடத்துகின்றன.இன்று தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. இந்த தொடரில் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த கட்டத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி, குழு A-வில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் B-யில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

இந்தியாவில் நடைபெற உள்ள உலககோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுவும் ஆசிய கோப்பை தொடர் ஒரு மினி உலக கோப்பை என்றே கருதப்படுகிறது. இதனால், அனைத்து அணிகளும் பட்டத்தை வெல்ல முனைப்பில் உள்ளது. அப்படி இருக்கும் சூழலில், ஆசிய கோப்பை தொடரில் தொடக்க நாளான இன்று பாகிஸ்தான், நேபால் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்கப்பட உள்ளது. இதில் குறிப்பாக, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவது நேபாளம் அணிக்கு இதுவே முதல் முறையாகும்.

அதுவும், கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் அணியை சர்வதேச களத்தில் எதிர்கொண்டு விளையாட உள்ளது நேபாளம். நேபாளம் அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இருந்தாலும், 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறும் கனவுடன், இந்த தொடரில் அனுபவம் வாய்ந்த அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. ஆனால், மறுபக்கம் பாபர் ஹசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அண்மையில் சர்வதேச ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் ஆஸியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளது. இதனால் உலக நம்பர் 1 ஒருநாள் அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.

மேலும், ஆசிய கோப்பை தொடரில் இன்று நேபாளம் அணிக்கு எதிராக விளையாடும் முதல் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்துவிட்டது. 2023 ஆசியக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் டெப்த்துடன் இறங்கியுள்ளது. இதுபோன்று, மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுடன், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக உள்ளது.

பாகிஸ்தான் லெவன்: பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, சல்மான் ஆகா, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுபோன்று, இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் நேபால் அணி கணிப்பின் அடிப்படையில், குஷால் புருடல், ஆசிப் ஷேக், பீம் ஷாரிக், ரோஹித் பவுடல் (கேப்டன்), குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பல் கமி, கரன் கே சி, சந்தீப் லமிச்சென், லலித் ராஜ்பன்சி ஆகியோர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஆசிய கோப்பை 2023 தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் காணலாம். மொபைல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையிலேயே காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்