மேற்கு இந்திய தீவுகள் அணி 423 ரன்கள் அடித்தால் வெற்றி!முடிந்தது 3-ஆம் நாள் ஆட்டம்
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 45 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 140.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக விகாரி 111 ,கோலி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் அடித்தனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே அடித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 34 ரன்கள் அடித்தார் .இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இந்திய அணியைவிட மேற்கு இந்திய தீவுகள் அணி 299 ரன்கள் பின்தங்கி இருந்தது.இதன் பின்னர் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.முதலில் வந்த நன்கு வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினார்கள்.இதன் பின் ஹனுமா விகாரி மற்றும் ரகானே ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.
பின்னர் 54.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 168 ரன்களில் டிக்ளர் செய்தது.அதிகபட்சமாக ரகானே 64 *ரன்கள்,விகாரி 53* ரன்கள் அடித்தனர்.இதற்கு அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி 467 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.ஆனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் 6 ரன்களிலும்,ப்ரத்வேய்ட் 3 ரன்களிலும் வெளியேறினார்கள்.இறுதியாக 3-ஆம் நாள் ஆட நேர முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் அடித்தது.மேற்கு இந்திய தீவுகள் அணி 2 நாட்கள் இன்னும் இருக்கும் நிலையில் 423 ரன்கள் அடித்தால் வெற்றிபெறலாம்.