34 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற போகும் அந்த ஒரு தொடர் ..! ரசிகர்கள் மகிழ்ச்சி !!
டி20I : இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் போன்ற ஆசிய நாடுகள் சேர்ந்த விளையாடும் தொடர் தான் ஆசிய கோப்பை. சமீபத்தில் கூட மகளீருக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. அதில், இலங்கை மகளீர் அணி இந்திய அணியை வீழ்த்தி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் 2027 வருடம் வரையில் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெற போகும் என்பதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த வருடத்திற்கான அதாவது 2025 -ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த உள்ளனர். மேலும், இந்த தொடர் டி20 வடிவில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆசிய கோப்பை தொடரை வரும் 2026 ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடத்த உள்ளார். அதனால் அடுத்த வருடம் ஆசிய கோப்பை தொடரை நடத்தவுள்ளனர்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடைசியாக 1990-1991ல் இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற்றது, அதிலும் இந்திய அணியே கோப்பையை வென்றது.
அதன் பிறகு இந்தியாவில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படவில்லை. தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஆசிய கோப்பை நடத்த போவதால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும், நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் டி20 என்பதால் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா விளையாடமாட்டார்கள், அவர்கள் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வை அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.