தென்னாப்பிரிக்காவிற்கு பெரிய அடி…அரையிறுதியில் இந்த வீரர் வெளியேற வாய்ப்பு ..!
2023 உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்தும் அரையிறுதியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய கடைசி போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அரையிறுதி 2-வது போட்டியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா விளையாடுவது கடினம் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பவுமாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்தபோது முதல் 9 பந்துகளுக்குப் பிறகு பவுமா மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் பவுமா நான்கு ஓவர்களுக்குப் பிறகு மைதானத்திற்கு திரும்பினார். பீல்டிங் செய்யும் போது நொண்டி கொண்டு பீல்டிங் செய்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் குவித்தது. 245 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து முஜீப் உர் ரஹ்மானிடம் பவுமா விக்கெட்டை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.