பண்ட் அரை சதம் ! அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி !
2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.இதன் பின் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடிய வந்த நிலையில் 28 ரன்னில் வெளியேறினார்.அடுத்து இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும் ரோகித் மற்றும் ரகானே ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. பின் 130 பந்துகளில் தனது 7 வது சதத்தை பதிவு செய்தார் ரோகித்.சிறிது நேரத்தில் ரோகித் 161 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ரகானே 67 ரன்கள்,அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.பண்டை தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை.அக்சர் 5 ரன்கள்,இஷாந்த் மற்றும் குல்தீப் டக் அவுட் ,சிராஜ் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.இதனால் இந்திய அணி 95.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே அடித்தது.களத்தில் பண்ட் 58 ரன்களுடன் இருந்தார்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் ,ஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.இதன் பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.