இந்திய அணி ஆல் அவுட் ! ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையில்
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆல்-அவுட் ஆன நிலையில் ,இதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி , பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன்,தாகூர்,சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.மூன்றாவது நாளான இன்றும் இந்திய அணி தொடந்து விளையாடியது.இந்திய அணியில் ரோகித் 44 ரன்கள், அகர்வால் 38 ரன்கள் ,ரகானே 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.அணியின் முக்கிய வீரர்கள் அரை சதம் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தாலும் தாகூர் மற்றும் சுந்தர் இணை சிறப்பாக விளையாடியது.சிறப்பாக விளையாடி தாகூர் மற்றும் சுந்தர் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இறுதியாக இந்திய அணி 111.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.தமிழக வீரர் சுந்தர் 62 ரன்கள் ,தாகூர் 67 ரன்கள் அடித்தனர்.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஹெசல்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் 33 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா.6 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 3-ஆம் நாள் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையில் 21 ரன்கள் அடித்துள்ளது.ஆகவே நாளை 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.