டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?
ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத பிரித்வி ஷாவுக்கு சென்னை வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில், தற்காலிமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத இந்த மீதமான போட்டிகளை அனுபவம் வாய்ந்த தோனி கேப்டனாக வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த சூழலில், சென்னை அணியில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் விளையாடமாட்டார் என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் பிரித்வி ஷாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, உடல் எடை அதிகமாக இருப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து அவருக்கு பல முக்கியமான போட்டிகளில் விளையாட வாய்ப்புகளும் குறைந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் கூட எந்த அணியும் எடுக்கவில்லை. இருப்பினும் அவர் இதற்கு முன்பு செய்த சம்பவங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
2018 முதல் 2024 வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 79 போட்டிகளில் 1892 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 13 அரைசதங்கள் அடங்கும். இப்படி பட்ட ஒரு வீரருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு சோகத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது. எனவே, இந்த சூழலில் தான் அவரை சென்னை அணிக்குள் கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
CSK அணியைப் பொறுத்தவரை, ருதுராஜ் கெய்க்வாட் ஒரு நிலையான தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் பெரிய பங்கு வகித்தார். அவர் இல்லாத நிலையில், டெவான் கான்வே மற்றும் ரசின் ரவீந்திரா போன்ற வீரர்கள் தொடக்கத்தில் ஆடலாம், ஆனால் பிரித்வி ஷா இறங்கினால் இன்னுமே சிறப்பாக இருக்கும். இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை தகவல்களாகவே பரவி கொண்டு இருக்கிறது.
ஐபிஎல் விதிகளின்படி, ஒரு வீரர் காயம் அல்லது வேறு காரணங்களால் சீசனில் இருந்து விலகினால், அந்த அணி மாற்று வீரரை (Replacement Player) தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அல்லது வாங்கப்படாத வீரர்களைப் பயன்படுத்தலாம். பிரித்வி ஷா ஏலத்தில் வாங்கப்படாதவர் (Unsold Player) என்பதால், CSK அவரை மாற்று வீரராக நேரடியாக வாங்கலாம். எனவே. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.