#T20WorldCupFinal: முதல் முறையாக டி-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து. இதில், அதிரடியாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து, 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அவரது அரைசதத்தை கடந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் சில அதிரடி ஷாட்டுகளை அடித்தார். இறுதியாக 18.5 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக ஐசிசி டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் இறுதி வரை களத்தில் இருந்து 50 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சை பொறுத்தளவில் டிரெண்ட் போல்ட் மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2010-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த நிலையில், தற்போது உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.