#T20 WorldCup 2022: இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தான் மக்கள் ஆர்வம் – ஷேன் வாட்சன்
இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியைப் பார்க்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
அக்-16இல் தொடங்கிய டி-20 உலககோப்பை தொடர் ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதியில் விளையாடும் 4 அணிகள் சூப்பர்-12 க்கு பிறகு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
சிட்னியில் நவ-9 இல் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், அடிலெய்டில் நவ-10 இல் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதவிருக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவில் வெற்றி பெறும் அணிகள் நவ-13இல் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது தான் நிறைய பேரின் கனவாக இருந்து வருகிறது, நானும் அதைத்தான் விரும்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
நெதர்லாந்து அணி நேற்று தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தென்னாபிரிக்காவின் அரையிறுதி கனவை தகர்த்தது. இதேபோல பாகிஸ்தான் அணியும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டி விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக வாட்சன் தெரிவித்தார்.
ஏற்கனவே சூப்பர்-12 இல் ஒருமுறை இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தை நான் மெல்போர்னில் பார்க்கத் தவறிவிட்டேன், ஆனால் அன்றைய அந்த சிறப்பு வாய்ந்த போட்டி தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் அற்புதமாக இருந்தது என்று சிலர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியதைப்போல் இந்த டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் அதேபோன்று நடக்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள், தன்னுடைய விருப்பமும் அதுதான் என்று வாட்சன் கூறியுள்ளார்.