#T20 WorldCup 2022: ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி.!
டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அணி வெற்றி.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் பரபரப்பான நிலையை அடைந்து வருகிறது. அரையிறுதிக்கு இன்னும் ஒரு அணி கூட தகுதி பெறாத நிலையில் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமாக கருதப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாக்-தென்னாப்பிரிக்கா போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் இப்திகார் அகமது(51), ஷதாப் கான்(52) ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 9 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் குவித்தது.
186 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக்(0), ரூஸோவ்(7) ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் பவுமா(36) ஓரளவு ரன்கள் குவித்தார். அதன் பிறகு பவுமா(36) மற்றும் ஐடன் மார்க்ரம்(20) இருவரையும் ஷதாப் கான் தனது ஒரே ஓவரில் காலியாக்கி ஆட்டத்தை பாக். வசம் திருப்பினார்.
ஒரு சமயத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 ஓவர்களில் 69/4 என்று ஆடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டம் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 14 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக ஆடினாலும் விக்கெட்களும் விழுந்து வந்தது. முடிவில் அந்த அணியால் 108/9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பாக். அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், ஷதாப் கான் 2 விக்கெட்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.