#Breaking: சென்னை உட்பட 9 நகரங்களில் டி-20 உலகக்கோப்பை போட்டி.. பிசிசிஐ அதிரடி!
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, உட்பட 9 நகரங்களில் 2021-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், 2021-ம் ஆண்டிற்கான டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பை டி-20 தொடரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதரபாத், தரம்சாலா, லக்னோ, அகமதாபாத் ஆகிய 9 மைதானங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும், இந்த தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பை போட்டியில் 16 அணிகள் கலந்துகொள்ளவுள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்படும் என ஐசிசியிடம் பிசிசிஐ உறுதியளித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.