டி20 உலகக்கோப்பை… 39 வயதில் மீண்டும் அணிக்கு திரும்பும் டு பிளெசிஸ்..?
ICC ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல், ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் கவனம் செலுத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூன் 3 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
சர்வதேச போட்டியில் விளையாடுவது குறித்து ஆலோசனை:
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்காக சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து ஆலோசித்து வருவதாக பாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். அபுதாபி டி10 லீக்கின் ஒளிபரப்பாளர்களிடம் பேசிய ஃபாஃப் டு பிளெசிஸ், ‘நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி நாங்கள் சிறிது காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம்.இதுகுறித்து புதிய பயிற்சியாளரிடம் பேசினேன்’ என கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு:
டு பிளெசிஸ் 2021 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டு பிளெசிஸ் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கான ஒயிட் பால் கிரிக்கெட்டில் டு பிளெசிஸ் கடைசியாக கடந்த 2020 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
டு பிளெசிஸ் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை. கடந்த 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைகளில் தென்னாப்பிரிக்காவுக்கு டு பிளெசிஸ் கேப்டனாக இருந்தார். ஆனால் கடைசி இரண்டு டி20 உலகக் கோப்பைகளுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 39 வயதான டு பிளெசிஸ் (du Plessis) சமீப காலமாக உள்நாட்டு அளவில் நடைபெறும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் 2023-ல் அதிக ரன்கள் எடுத்த 2-வது பேட்ஸ்மேன்:
இந்தியன் பிரீமியர் லீக்கின் கடைசிப் பதிப்பில், அதிக ரன்கள் அடித்ததில் ஷுப்மான் கில்லுக்கு அடுத்தபடியாக டு பிளெசிஸ் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஐபிஎல் 2023ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி)க்காக 14 இன்னிங்ஸ்களில் 730 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2023ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய டு பிளெசிஸ் 730 ரன்கள் எடுத்தார். அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சுப்மான் கில்லுக்கு அடுத்தபடியாக டு பிளெசிஸ் இரண்டாவது இடத்தில் இருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் டு பிளெசிஸ், குயின்டன் டி காக் மற்றும் ரிலே ரூசோ உள்ளிட்ட அனுபவம் மிக்க வீரர் தேர்வு செய்யப்படலாம் என அணியின் பயிற்சியாளர் வால்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.