#T20 World Cup 2022: இந்தியா-பாக் போட்டியன்று மெல்போர்னில் மழை வருமா? வானிலை மையம் என்ன சொல்கிறது.!
டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 முதல் தொடங்குகிறது.
சூப்பர்-12 இன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 அன்று மெல்போர்னில் விளையாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளன்று, மெல்போர்னில் மழைக்கான வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஏற்கனவே இந்தியா-நியூசிலாந்து இடையேயான பயிற்சிபோட்டி மழையால் கைவிடப்பட்டது.
மேலும், போட்டி நடைபெறும் நாளன்று மாலை 80% மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மைதானத்தில் கூடுதலாக ஸ்விங் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு அணிகளும் கடைசி நேரத்தில் போட்டியில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கேற்றாற்போல் தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.