#T20 World Cup 2022: ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த யு.ஏ.இ அணி.!
டி-20 உலகக்கோப்பை தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கைக்கு எதிராக யு.ஏ.இ அணி பல சாதனைகள் படைத்துள்ளது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்யாசத்தில் யு.ஏ.இ அணியை வென்றது.
இந்த போட்டியில் யு.ஏ.இ அணி இந்த 2022 டி-20 உலகக்கோப்பை சீசனின் குறைந்த பட்ச ஸ்கோராக 73 ரன்களை அடித்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சென்னையில் பிறந்து யு.ஏ.இ அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் மெய்யப்பன் இந்த போட்டியில் அடுத்தடுத்து ஷனாக்கா, ராஜபக்சா, மற்றும் அசலங்கா ஆகிய 3 விக்கெட்களை எடுத்து இந்த 2022 டி-20 உலகக்கோப்பை சீசனின் முதல் ஹாட்ரிக் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் யு.ஏ.இ அணிக்காக முதல் ஹாட்ரிக்க்கையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கார்த்திக் மெய்யப்பன் டி-20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் எடுத்த 5 ஆவது வீரராவார். டி-20 உலகக்கோப்பை தொடரில் இதற்கு முன் ஹாட்ரிக் எடுத்தவர்கள் விவரம் பின்வருமாறு, பிரெட் லீ(2007), கர்டிஸ் கேம்ஃபெர்(2021), வணிந்து ஹஸரங்கா(2021) மற்றும் ககிஸோ ரபாடா(2021).
மற்றும் யு.ஏ.இ அணிக்காக 10 ஆவது வீரராக களமிறங்கிய ஜுனைட் சித்திக், சமீரா வீசிய ஓவரில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸானது 109 மீ. தூரம் சென்றது. 2022 டி-20 உலகக்கோப்பை தொடரின் மிக நீண்ட தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸ் இதுவாகும். இவ்வாறு யு.ஏ.இ அணி, இன்றைய போட்டியில் மோசமான மற்றும் அபாரமான சாதனைகள் படைத்திருக்கிறது.