#T20 World Cup 2022: கர்டிஸ் கேம்ஃபேர் அதிரடியால் அயர்லாந்து அபார வெற்றி.!
ஐசிசி டி-20 உலககோப்பையின் ஏழாவது போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது தகுதிச்சுற்றுப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி ஸ்காட்லாந்து அணியில் மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்து இந்த தொடரில் ஸ்காட்லாந்து அணி அதிக பட்ச ஸ்கோரை (176/5) குவிக்க உதவினார். 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் கர்டிஸ் கேம்ஃபேர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், அதன் பின் அதிரடியாக விளையாடியது. கர்டிஸ் கேம்ஃபேர் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் அரைசதத்துடன், அணியை வெற்றி பாதைக்கு முன்னேற்றினார். அயர்லாந்து அணிக்காக கர்டிஸ் கேம்ஃபேர்-ஜார்ஜ் டாக்ரெல் ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியை வெற்றிபெற வைத்தனர்.
கர்டிஸ் கேம்ஃபேர் 72 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 39 ரன்களும் குவித்தனர். 19 ஒவர்களிலேயே அயர்லாந்து அணி 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக கர்டிஸ் கேம்ஃபேர், தேர்வு செய்யப்பட்டார்.