#T20 World Cup 2022: 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி அபார வெற்றி.!
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 66 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஸாரி ஜோசப் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை, இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஜேசன் ஹோல்டர், இறுதி வரை அணியின் வெற்றிக்கு போராடினார். இருந்தும் அவர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் மார்க் வாட் 3 விக்கெட்களும், மைக்கேல் லீஸ்க், பிராட் வீல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஜார்ஜ் முன்சி, ஆட்டநாயகன் விருது பெற்றார்.